Friday, December 18, 2009

Will Dalit History annihilate untouchability?

தோழர் பாரிக்கும் மற்றும் விடுதலை சிறுத்தைகளுக்கும்,
வாழ்த்துக்கள். தலித் வரலாற்று நூல்கள் வெளியீடு என்னை பரவசப்படுத்துகிறது. நான் எழுதிய "தலித் குடிகளின் மறுக்கப்பட்ட வரலாறு" (2002) வெளியிடும்போது விடுதலை சிறுத்தைகளில் தோழர் சிந்தனை செல்வன் போன்றோர் அதை களத்திற்கு கொண்டுசென்றது என் நினைவை விட்டு அகலாது. ஆனாலும், இந்நூலில் தோழர் திருமாவளவனை விமர்சினப்படுத்தும் ஒரு அதிகாரமும் இருந்ததால் சிறுத்தைகள் மத்தியில் அதை வெகுவாக கொண்டுசெல்ல முடியவில்லை. இன்னொரு பக்கம், இந்நூல் ஒரு பத்தாயிரம் மக்களை புத்த சமயத்தை தழுவ வைத்தது விடுதலை சிறுத்தைகளின் பிறப்பிடமான பெரம்பலூர் மாவட்டத்தில் தான். வரலாற்று நூல்கள் வெளியீடு நம் சமுகத்தை மாற்றும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், இந்நூல் தொகுப்புகளை களத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தமிழ் தேசியம் உள் விழுங்காத ஒரு இயக்கமாக விடுதலை சிறுத்தைகளின் இயக்கம் அம்பேத்கரியத்தை செயல்படுத்துமா? அல்லது அம்பேத்கருக்கு முன்னரேயே நம் பரம்பரைகள் பூர்வ புத்த குடிகளே என்கிற அய்யோத்திதாசரின் கருத்து புரட்சியை தமிழ் நாட்டில் செயல் படுத்துமா?
இந்த கேள்வியை நான் ஏற்கனவே தோழர் திருமாவிடம் சில மேடைகளில் சிறிது கோபத்துடன் கூட வெளிப்படுத்தி இருக்கிறேன். இன்றைய திராவிட அரசியலை ஒடுக்குகிற எதாவது கருத்து கோட்பாடு தோழரிடம் இருக்கிறதா? புரட்சியாளர் அம்பேத்கரின் குரலாக திருமாவின் குரல் இருந்ததாக நாம் நினைத்ததெல்லாம் வெறும் கனவா? திராவிட மாயைக்குள் சிக்கிய திருமா மீண்டும் தலித் மக்களுக்கு கிடைப்பாரா? அல்லது மீண்டும் தனது வாள் வீச்சான கனல் பறக்கும் உரை வீச்சை வெற்று தமிழ் தேசியத்திற்கு செலவிட்டு மற்றவரைப் போல் மறைவாரா?
இச்சிறுத்தை சவாரி செய்யவே காத்திருந்த தலித் சிறுத்தைகள் முதுகில் மீண்டும் நடிகர்களின், திராவிட இயக்க நரிகள் சவாரி செய்ய ஆரம்பித்துவிட்ட சூழலை உருவாகியது திருமாதான் என்பதை உணர்ந்து, திராவிட-தமிழிய வேர் அறுத்துப்போடும் சிறுத்தை நகத்தை கொஞ்சம் சீவிக்கொள்ளச் சொல்லுங்கள்!
இன்னும் சிந்தனை செல்வன் போன்ற பலம் வாய்ந்த தலைவர்களை தளபதிகளாக பெற்ற பேரு படைத்த பெருமையோடு திருமா தனது அரசியலை மக்கள் அரசியலாக மாற்றினால், மீண்டும் களப் பறையர் ஆட்சியை தமிழகத்தில் நடத்திட முடியும். அல்லது ஒட்டுமொத்தமாக இருபத்து நான்கு சதவீத தலித் மக்களில் எழுபது சதவீதம் இருக்கும் தேரப் பறையரை அதாவது தேரவாத புத்த பறையரை மீண்டும் அவர்களின் பூர்வ சமயமான புத்தத்தில் சேர்த்து வரலாற்றின் பெரும் இடைவெளிகளை நிரப்பிவிடும் பெரும் கலாச்சார புரட்சியை செய்யுங்கள்!
வரலாறு மட்டுமே நம்மை விடுதலை செய்யும் என்பதை உணருங்கள்!
தீண்டாமையை அழித்தொழிக்கும் தலித் வரலாற்றை வென்றெடுப்போம்!

என்றும் தம்மத்தில்,
சாக்ய மோஹன்
பிலடெல்பியா