"ஒரு சிறுத்தையின் முதுகில் இன்னொரு சிறுத்தைதான் சவாரி செய்யும்! நீதான் அந்த விடுதலை சிறுத்தை!" என நான் எழுதியதை பொய்யாக்கிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களே!
வீர முழக்கம் எழுப்பி, தமிழர்களால் சிறைவைக்கப்பட்ட சேரிகளில் கொடியேற்ற பல உயிர் தியாகம் செய்து, "திருப்பி அடிப்போம்!" என முழங்கியதால் சேரியின் வீடுகள் ஜாதி-தமிழரால் கொளுத்தப்பட்டு, தூங்கும்போது கழுத்தறுபட்டு... இப்படி எத்தனை எத்தனை இழப்புகளை சந்தித்த பின், அவமானத்தின் சின்னமாக தலித் குடிகளை தலை குனிய வைத்த அண்ணன் திருமா அவர்களே!
ஹிந்தத்துவத்தை வேரறுக்க முழக்கமிட்டு எம்மை எந்தை அம்பேத்கர் பெயர் சொல்லி உமக்குள் இழுத்து கட்டிக்கொண்ட இந்திய தலித் சிறுத்தை இயக்கம், ஹிந்தத்துவத்தை அடியொற்றிய புலிதேசியத்தாலும், சூத்திர ஜாதியத்தை அடியொற்றிய தமிழ்-தேசியத்தாலும் உள் விழுங்கப்பட்டு சேரிகளில் உலக பயங்கரவாத புலி இயக்கத்தை கொண்டுவந்து அம்பேத்கரியத்தை நீர்த்துபோகவைத்தபின் உங்கள் அரசியல் அழிவு துவங்கியது. இதை நாம் எடுத்துரைத்தும் கண்டுகொள்ளாது சூத்திரர் பின்னத்தில் சுயமரியாதை தேடி கருணாநிதியின் காலடியில் திராவிட-தமிழிய கள்ளுண்ண மயக்கத்தில் எமது சமூக விடுதலைக்கான எல்லா விஷயங்களையும் பின்தள்ளிவிட்டு நரைத்துக்கொண்டிருக்கும் மீசையை மட்டும் முறுக்கி விட்டு குப்புற விழுந்து அந்த மீசையிலும் சேற்றை பூசிக்கொண்டு எம் மக்களையும் இழிவாக்கிவிட்டீர்களே!
எப்படியாவது மீண்டும் கரை திரும்புவீர் என நினைத்து காத்திருந்த மக்களுக்கு உமது திராவிட-கருணையால் பச்சை துரோகம் இழைத்துள்ளீர் என்பது உணர முடிகிறதா? தேர்தல் அரசியலில் மற்ற ஜாதிகளுக்கு இது சகஜமாக இருக்கலாம்; ஆனால், உமக்கு ஒரு சீட்டுக்காக கெஞ்சி கூனி குறுகி நிற்கும் நிலை அவமானம்! "எங்களுக்கு 5 தொகுதிகள் தர மறுத்தால் நாற்பது தொகுதிகளிலும் போட்டி இடுவோம்," என அறிக்கை விட்டிருந்தால், உங்களை மெச்சி இருப்போம்! ஆனால், கொடுத்ததை வாங்கி கொண்டோம் என நீங்கள் சொல்லும்போது எங்கள் உடல் கூசுகிறது. வெட்கம் இல்லாமல் தம் மக்களை ஒரு தொகுதியில் தான் மட்டுமே போட்டியிட ஏற்றுக்கொள்ளும் உங்களுக்கு இது அவமானம் இல்லையா? இகழ்ச்சி ஒன்றே குறிக்கோளாய் அரசியல் செய்யும் "எழுச்சித் தமிழரே!" இது தலித் குடிகளுக்கு இழுக்கு!
"தோற்றாலும் தனித்தே நிற்போம்! யாம் யார்க்கும் அரசியல் அடிமை இல்லை! இந்த நாட்டை இனி நாம் ஆள்வோம்!" என சூளுரைக்கும் பெருந்தமக்கை மாயாவதி காலை கழுவி குடித்தால் கூட தமிழ்நாட்டில் இருக்கும் உம போன்ற தலித் அரசியல் தலைவருக்கு புத்தி வராது! இந்த தேர்தல் கொள்கை துறந்த உங்களுக்கு கடைசி தேர்தலாகவே இருக்கும்! எம்மால் உம்மை மன்னிக்க முடியாது அண்ணன் அவர்களே!
இப்படிக்கு,
உங்கள் அன்பு தம்பி,
சாக்ய மோஹன்